தென்காசி மாவட்டம் இலத்தூரில் மதினாப்பேரி குளத்தின் கரையில் மனித உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டனர். அப்போது சடலத்தின் காலில் மெட்டி இருந்தது. இதனால் அது ஒரு பெண்ணின் சடலம் என்பது உறுதியானது.

மேலும் சடலத்திற்கு அருகிலேயே மது பாட்டில்களும் இருந்தது. அந்த பெண்ணை எரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.