கத்தார் நாட்டில் வேலைக்குச் சென்ற தமிழர் சக்திவேலின் நிலை, ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் கதையுடன் ஒப்பிடக் கூடியதாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், டிரைவர் வேலைக்காக கத்தாருக்கு சென்றுள்ளார். ஆனால் சக்திவேலுக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் சென்று 300-க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை மேய்க்க கூறியுள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் சமைத்து கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி வேலை வாங்கியுள்ளனர். சக்திவேலுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மண் தரையில் படுத்து தூங்குவதால் பாம்பு தொல்லையும் அதிகமாக இருந்துள்ளது. இந்தியாவிற்கு அனுப்பி விடுங்கள் என சக்திவேல் முறையிட்டுள்ளார். அப்போது சக்திவேலை காரில் அழைத்துச் சென்று பத்து கிலோமீட்டர் தாண்டி இறக்கிவிட்டு மீண்டும் பாலைவனத்திற்கு நடந்து வருமாறு கூறியுள்ளனர்.

உடல் நலம் குன்றிய ஒருவரை சக்திவேல் இருக்கும் பகுதியில் கொண்டு வந்து விட்டு அவரையும் பராமரிக்க கூறியுள்ளனர். இப்படி தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோவில் கூறி என்னால் ஒரு நிமிடம் கூட இங்கு வாழ முடியாது. மீண்டும் என்னை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுங்கள் என சக்திவேல் பேசியுள்ளார். அவரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.