
கேரளாவில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட பல நடிகைகளிடம் விசாரணை நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது தகவல் உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் அந்த அறிக்கையை தடை செய்ய வேண்டும் என மலையாள பட தயாரிப்பாளர் சஜிமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள சினிமாவில் பெருமளவு இருக்கிறது எனவும், பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் இருக்கிறது. குறிப்பாக பாலியல் ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு மட்டும்தான் பட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மலையாள சினிமாவை ஒரு 15 பேர் கொண்ட மாபியா கும்பல் கட்டுப்படுத்தும் நிலையில் நடிகைகளின் முத்த காட்சி மற்றும் நிர்வாண காட்சிகளில் நடிக்க நிர்பந்தப்படுத்துவதோடு மறுத்தால் மிரட்டுகிறார்கள்.
அதோடு பாலியல் ரீதியான உறவுக்கு மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுப்பதுடன் அவர்களைப் பிரச்சினைக்குரியவர்கள் என தனிப்பட்ட முறையில் முத்திரை குத்துகிறார்கள். இது தொடர்பாக பயம் காரணமாகவே நடிகைகள் பலரும் புகார் அளிப்பதில்லை. மேலும் நடிகர்கள் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்கப்படுவதுடன் நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.