திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டார். அவரின் தலைமையில் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு நல துறையினர் மூலம் குட் டச்,பேட் டச் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மாணவிகள் சிலர் கணித ஆசிரியர் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் 2 பேரும் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக கூறினர்.

இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரகம் மூலம் இதனை உறுதி செய்தனர். இதனால் அந்த 2 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அந்த 2 ஆசிரியர்களும் எந்த தவறும் செய்யவில்லை என திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.