தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளரிடம் லிப்ட் கேட்டு சென்று, அவரை மிரட்டி கூகுள்பே மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது பைக்கில் மன்னார்குடிக்கு வந்தபோது, இருவர் லிப்ட் கேட்டு சென்றனர்.

பின்னர் பாதி வழியிலேயே பைக்கை நிறுத்தி அவரை ரயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மேலும் ஐந்து பேரை அழைத்து சந்தோஷை தாக்கி, அவரது செல்போனில் இருந்து கூகுள்பே ரகசிய எண்ணை கேட்டு, ரூ.8,000 தொகையை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்ப செய்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் அபிலேஷ் (22) உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ரவுடி அபிலேஷ் மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டிஎஸ்பி பிரதீப் தலைமையில் போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்ற அபிலேஷ் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது இடது கை முறிந்து காயமடைந்த நிலையில், அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் மன்னார்குடி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.