மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக 11 வயதுள்ள காது கேளாத மற்றும் வாய் பேச தெரியாத சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி 46 இடங்களில் 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் ரமேஷ் சிங் என்பவர் சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடிய பிறகு ரயிலில் ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். இதனை அறிந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பின்புலத்தை பற்றி தெரிந்துகொண்டு போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு 5 வயது சிறுமியை ரமேஷ் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அதற்காக 10 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஒரு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சில தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருடைய மரண தண்டனை ரத்தானது. இதனையடுத்து 4வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் தற்போது 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். மேலும் அவரை தற்போது போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.