விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர் தாண்டவமூர்த்திகுப்பத்தைச் சேர்ந்த குமாரவேலின் மனைவி சுதா(34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுதா கூறியதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

எனது கணவர் குமாரவேல் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்தபோது அந்த பெண்ணுக்கும் எனது கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தற்போது என்னுடன் பேசாமல் என்னையும் எனது பிள்ளைகளையும் விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து எனது கணவர் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமடைந்து தற்கொலைக்கு முயன்றேன் என சுதா கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.