ஒடிசா, பூரி மாவட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில் உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலம் ஆகும்.  இக்கோவிலில் நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி வீதியாக பவனி வரும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். இதனை காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் சுபத்ரா, கிருஷ்ணர் ,பலராமர் ஆகிய சாமி சிலைகளின் ரத யாத்திரை திருவிழா கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது .  இதைத்தொடர்ந்து நேற்று கோவிலில் உள்ள பாலபத்ராவின் சிலை தேரில் வைத்து யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ரத யாத்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அந்த சமயம்  ரதம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பாலபத்ரா சாமியின் சிலை சரிந்து பக்தர்களின் மேல் விழுந்தது.  இதனால் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.  மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.