பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக கட்சியின் மாநில தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைத்தது முதலில் பயந்தது அதிமுக தான். அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவரை அவ்வப்போது குறை சொல்லி விமர்சிப்பதும் அதிமுக கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் தான். அவரை விமர்சிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் எங்கள் தலைவரை அவர்கள் தொடர்ந்து விமர்சித்து சேற்றை வாறி ஊற்றுகிறார்கள்.

எங்கள் தலைவர் சொன்னது போன்று அதிமுக கட்சி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் 4-வது இடத்தை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அரசியல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறீர்கள். தற்போது எழுச்சிமிக்க தலைவர்கள் அதிமுகவில் இல்லை என தொண்டர்கள் நொந்து போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு தலைவர் அம்மா என்று பேசுகிறார் என்றால் அது பிரதமர் மோடி மட்டும் தான். அவரை அன்று எடப்பாடி பழனிச்சாமி புகழாத நாளே கிடையாது. அதே வாய்தான் தற்போது அவரை விமர்சித்தும் பேசி வருகிறது. மேலும் எங்கள் தலைவரை தொடர்ந்து விமர்சித்து வருவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். மேலும் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் நாங்கள் எப்போதும் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.