காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாதுகாப்பாக இருக்கையில் அமரவைத்தனர். முதலுதவி வழங்கப்பட்டதும் உடல்நிலை சீராகி, அவர் மீண்டும் பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் போது, பிரதமர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன் என்று தெரிவித்தார்.

அதன்பின்னர், கார்கே கூறிய “அவதுவரை உயிரோடிருப்பேன்” என்ற வார்த்தைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கார்கேயின் பேச்சு அவமானகரமானதும் அருவருப்பானதும் என்று கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் மோடியின் மீது வைத்துள்ள வெறுப்பு கார்கேயின் பேச்சில் வெளிப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அமித் ஷா தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், கார்கே தனது பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் நிலையை வெளிப்படுத்தியதாக கூறினார். மேலும், கார்கே நீண்ட ஆயுட்காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனப் பிரதமர் மோடியும் தாமும் வேண்டிக்கொள்கிறோம் என்றும், 2047-ஆம் ஆண்டு விக்சித் பாரத் உருவாக்கப்படுவதை அவர் கண்டுகளிப்பார் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக எவ்வளவு வெறுப்பும் பயமும் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தனது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். கார்கே போன்றவர்கள் தொடர்ந்து மோடியை விமர்சித்து, அவரை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மல்லிகார்ஜூன கார்கேயின் உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.