
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரப்பு முதலில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் கட்டப்பட்டு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.
உடனே அங்கு வசிக்கும் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். உடனே குழந்தையின் தொப்புள் கொடியை கட்டி முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தகவல் அறிந்து விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தை நலமாக உள்ளது. இந்த குழந்தை பிறந்து ஒரு நாள் ஆகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பச்சிளம் குழந்தையை உயிருடன் கட்டை பையில் வைத்து சாலையோரம் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.