
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த 18 வருட ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி எடுத்த மிக குறைந்த ரன்கள் இதுவாகும். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ரன்களை பதிவு செய்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூர் அணி 70 ரன்களில் ஆல் அவுட் ஆனது தான் இதுவரையில் மிகக் குறைந்த ரன்களாகும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில் 10.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. அவர்கள் எளிதாக இலக்கை அடைந்து சென்னையை வீழ்த்தினர். மேலும் இதன் காரணமாக சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5-வது தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு சாதகமாக எதுவுமே அமையவில்லை. நாங்கள் போதுமான ரன்களை இந்த போட்டியில் சேர்க்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஸ்கோரை பார்த்து விரக்தி அடையாமல் இருப்பது மிகவும் முக்கியம். எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கும் நிலையில் அதையெல்லாம் நாங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.
எங்களுடைய அணியை நாங்கள் பிற அணிகளுடன் ஒப்பிட விரும்பவில்லை. எங்கள் அணியின் ஓப்பனர்கள் எல்லா பந்துகளையும் சிக்சர் அடிக்கக்கூடியவர்கள் கிடையாது. இருப்பினும் எங்கள் அணியில் சிறந்த பேட்டர்கள் இருக்கிறார்கள். பவர் பிளேவில் 62 ரன்களை அடிக்கக்கூடாது என்று நினைத்து விளையாட கூடாது. ஏனெனில் பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டால் நடு வரிசை வீரர்களுக்கு அது சிக்கல் ஆகிவிடும். மேலும் பின் வரிசை வீரர்களால் பெரிய ஷார்ட்டுகளை ஆட முடியாது என்று கூறினார்.