
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் திலீப் முகமது(47) என்பவர் வருவாய் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
அப்போது பட்டாவில் கணினி திருத்தம் செய்ய திலீப் முகமது 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசுவநாதன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடாவிய ரூபாய் நோட்டுகளை விஸ்வநாதன் திலீப்பிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திலீப்பை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திலீப்புக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.