
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிர்வாகிகளை வைத்து தனித்தனி குழுக்களை அமைத்து கட்சி நிர்வாகம் பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயலர் சரவணன் (47) நேற்று விக்கிரவாண்டிக்கு வந்து மாநாடு நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் நேற்று மாநாடு பணிகளை முடித்த பிறகு வீட்டிற்கு சென்ற பின் திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறினார்.
அதன் பின் அப்படியே உயிரிழந்துவிட்டார். இவருடைய மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அஞ்சலி செலுத்த சென்ற புஸ்ஸி ஆனந்த் சரவணன் உடலை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் கட்சிக்காக அயராது உழைத்தவர். கழகப் போராளி கட்சிக்காக ஓடோடி உழைத்த அவருடைய மரணம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தருவதாக அமைந்துள்ளது. மேலும் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.