சென்னை பல்லாவரத்தில் தனியார் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பேர் வசித்து வருகிறார்கள். இதில் 7-வது மாடியில் உமா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவன் பாலகிருஷ்ணன். இவர்  பூட்டானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு (23) என்ற மகன் இருக்கிறார். அந்த குடியிருப்பில் மகன் மற்றும் தாயார்  வசித்து வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி 7-வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்குள்ள  காவலாளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த காவலாளி முத்துராமன் என்பவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது 7-வது மாடியில் இருக்கும் மற்ற வீடுகள் எல்லாம் பூட்டி இருந்த நிலையில், ஒரு வீடு மட்டும் உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது.

இதுகுறித்து அவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஷ்ணு அழகிய நிலையில் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் தாயார் உமா புலம்பிய நிலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இதில் உமாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் உமாவை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து பூட்டானிலிருந்து வந்த உமாவின் கணவர், காவல்துறையினரிடம் இருந்து ஒப்புதல் பெற்று உமாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.