
டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு இன்று தொடங்கிய நிலையில் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் நேற்று இந்த மாநாட்டின் பிரதிநிதிகளோடு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது, ஒரு நாடு என்பது அதன் கலாச்சாரம் மற்றும் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படும் நிலையில் இந்த விஷயத்தில் உலகில் எந்த ஒரு நாட்டுடனும் நம்மை ஒப்பிட முடியாது. கலாச்சாரத்தில் இந்தியா தனித்துவமான நாடாக இருக்கும் நிலையில் நம்முடைய கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்ப்பது நம்முடைய கடமை. ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதனை உடல் ரீதியாக முறியடிப்பது கிடையாது. மாறாக அதனுடைய கலாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி அந்த மாநிலத்தின் மொழியை அழிப்பது தான் ஒரே வழி என்றார். இந்தியா மீது படை எடுத்தவர்கள் நம்முடைய மொழி கலாச்சாரம் வழிபாட்டு தளங்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்ட நிலையில் அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக இருந்தனர்.
அவர்களிடம் காட்டுமிராண்டித்தனமும் பழி வாங்கும் தன்மையும் மிக உச்சத்தில் இருந்தது என்று அவர் கூறினார். இதில் ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கான வழி அந்த மாநிலத்தின் மொழியை அழிப்பது தான் என்று ஜெகதீப் தன்கர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்து வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் எம்பி கனிமொழியும் அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் துணை ஜனாதிபதியின் பேச்சை மேற்கோள்காட்டி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று குறிப்பிட்டார். மேலும் தமிழகத்திற்கு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை தருவோம் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் துணை ஜனாதிபதியின் பேச்சும் சர்ச்சையாக மாறியுள்ளது.