
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் அது கிட்டத்தட்ட 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி மாநிலத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு வாகனங்கள் நீரில் மூழ்கியது.
மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மழை நின்ற பிறகு தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு இயல்புநிலை திரும்பும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் முகாம்களாக மாறுவதால், நாளைய அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.