மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உள்பட இரண்டு பேரின் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை உரிமையாளர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் சுகாதார ஆய்வாளர் பிருந்தா மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடந்த நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நகராட்சி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.