
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்வினி பித்ரே, 2005ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி பித்ரே காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். புனே மற்றும் சாங்லி பகுதிகளில் பணியாற்றிய அவர், கலம்போலி காவல் நிலையத்தில் பணியாற்றும் போதே மூத்த காவல் அதிகாரியான அபய் குருந்த்கருடன்பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கம் பின்னர் ஒரு துயரமான சம்பவத்துக்கு வழிவகுத்தது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அஷ்வினி காணாமல் போன நிலையில், அவரது கணவரும் மகளும் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் அஷ்வினியின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை சோதனை செய்த போது, அஷ்வினி பித்ரே மற்றும் அபய் குருந்த்கருக்கு இடையே தனிப்பட்ட தொடர்புகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருமணம் செய்ய வற்புறுத்திய, அஷ்வினி பித்ரேவை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அபய் மற்றும் அவரது நண்பர்கள், அஷ்வினியின் உடலை மரம் வெட்டும் இயந்திரத்தின் மூலம் துண்டுகள் துண்டுகளாக வெட்டி, ஓடையில் வீசி மறைத்தனர். மேலும், அஷ்வினி உயிருடன் இருப்பது போல காட்ட, அவரது மொபைலில் இருந்து நண்பர்கள், உறவினர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன.
அவர் அஸ்வினியின் செல்போனிலிருந்து உறவினர்களுக்கு How Are You என்ற கேள்வியைக் கேட்க அது அஸ்வினி அனுப்பியது இல்லை என்பது தெரியவந்தது. ஏனென்றால் அஸ்வினி எப்போதும் You என்று சொல்வதற்கு பதிலாக U எழுத்தை தான் பயன்படுத்தி மெசேஜ் அனுப்புவார். இது இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது.
இந்த கொடூரமான கொலை வழக்கு, சுமார் 9 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அபய் குருந்த்கர், மகேஷ் ஃபல்ஷிகர் மற்றும் குந்தன் பண்டாரி ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கின் இறுதி அமர்வு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.