மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. பீட் நகரைச் சேர்ந்த நீலேஷ் வாகதே என்ற மருத்துவர், 2022-ஆம் ஆண்டு பிரியங்கா பூம்ரே என்ற பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில மாதங்களிலேயே  நீலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவின் பெற்றோர்களிடம் ரூ.1 கோடி வரதட்சிணை மற்றும் தனியாக மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.

பிரியங்காவின் பெற்றோர்கள் இதற்கான பணத்தை உடனடியாக அளிக்க முடியாததால், நீலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவை துன்புறுத்த ஆரம்பித்தனர். அவர்களின் துன்புறுத்தலால் அவதிப்பட்ட பிரியங்கா, தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, பிரியங்காவை நீலேஷ் வாகதே குடும்பத்தினர் பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியங்காவின் தற்கொலைகுறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவரது கணவா் நீலேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.