திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி சேவூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதுடைய சத்தியவாசன் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தெருவில் நடந்து சென்ற சத்திய வாசனை அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் அழைத்துள்ளார். அவர் சிறுவனிடம் எதற்காக எனது காரில் பெயரை எழுதினாய்? என கேட்டதாக தெரிகிறது. அப்போது சிறுவன் நான் எழுதவில்லை என கூறியுள்ளார். அதனை நம்பாத மோகன் சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார்.

மோகன் வீட்டிலிருந்து சிறுவனின் சத்தம் வருவதை கேட்ட கணேசனும் அவரது உறவினர்களும் அங்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தனது மகனை தாக்கியது குறித்து கணேசன் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் தட்டிக்கேட்ட கணேசனின் உறவினர்களான செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிறுவன், செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 3 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.