ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் ஹஸ்ரத்துள்ளா சஜாயின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹஸ்ரத்துள்ளா சஜாயின் நெருங்கிய நண்பரும், அஃப்கான் கிரிக்கெட் வீரருமான கரீம் ஜனாத் தனது சமூக வலைதள பக்கத்தில் இதை அறிவித்துள்ளார். அதில் , “என் சகோதரனைப் போல இருக்கும் நண்பன் ஹஸ்ரத்துள்ளா சஜாய் தனது மகளை இழந்தார் என்பதை அறிவிக்க இதயம் உடைகிறது. இந்த நேரத்தில் அவரும் அவரது குடும்பமும் எதிர்கொள்ளும் துயரத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கரீம் ஜனாத் பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சஜாய் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு யுனைட்டெட் அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை செய்த ஹஸ்ரத்துள்ளா சஜாய், 16 ஓடிஐ, 45 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2019ல் அயர்லாந்துக்கு எதிராக 162 ரன்கள் அடித்து, சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோரைக் பதிவு செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அஃப்கான் பிரீமியர் லீக் போட்டியில், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சர்ச்சைக்குரிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். எனினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.