
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரம் கிராமத்தில் சதீஷ்குமார் (35)-சிவகாமி (30) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பட்டுக்கோட்டையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற நிலையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டதால் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் குழந்தையின் வயிற்றில் பலூன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை பலுனை விழுங்கியதால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.