திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தேவராஜ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் ராமாயி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ராம் பிரசாத் தனது தங்கையை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் ராம் பிரசாத் தனது தங்கையின் வீட்டிற்கு சென்று ஆண்கள் யாரிடமும் பேசக்கூடாது என கண்டித்துள்ளார்.

அப்போது ராமாயி என்னை கண்டிக்க நீ யார் என தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம் பிரசாத் தனது தங்கையின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தற்கொலை செய்தது போல தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.