மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மும்பை நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் பயந்தர் ரயில் நிலையம் உள்ளது. அதன் நடைமேடையில் இரண்டு பேர் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது ரயில் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. உடனே அவர்கள் இரண்டு பேரும் கீழே தண்டவாளத்தில் இறங்கி அந்தப் பக்கம் செல்கின்றனர். இருவரும் கைகளை கோர்த்தபடி சென்று திடீரென்று ரயில் தண்டவாளத்தின் குறுக்கே படுத்துக் கொள்கிறார்கள்.

ரயில் நெருங்கி வந்த போது இவர்கள் செய்த செயலை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரயில் சில வினாடிகளில் இருவர் மீதும் ஏறி சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தெரியாத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.