திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

ஆனாலும் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியாக சென்றது. இதனால் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்தனர். அப்போது 5 அரசு பேருந்துகள், ஒரு தனியார் பேருந்து என மொத்தம் ஆறு பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அதிரடியாக ஆய்வு நடத்தி அந்த 6 பேருந்துகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக ஓட்டுனரும் கண்டக்டரும் எங்கள் நிர்வாகம் கூறிய வழிமுறைகளை தான் பின்பற்றுகிறோம் என முறையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் எங்கள் மக்களுக்காக பேருந்து ஓட்டுகிறீர்களா? ரேசுக்காக ஓட்டுகிறீர்களா?

அரசு போக்குவரத்து கழகமும் மக்களுக்காக தானே இயங்குகிறது. மக்களை ஊருக்குள் சென்று ஏற்றாமல் இடையில் இறக்கி விட்டால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் டிரைவர்களும், கண்டக்டர்களும் திணறினர். இதேபோல பேருந்துகள் மீண்டும் நிற்காமல் சென்றால் தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.