விழுப்புரம் மாவட்டம் ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு(50). இவரது மனைவி பச்சையம்மாள்(46). இந்த தம்பதியினருக்கு கோபிகா(18) என்ற மகளும், குணசேகர்(21) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் துரைக்கண்ணனின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துரைக்கண்ணு தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு புறப்பட்டார். ஒரு மோட்டார் சைக்கிளில் துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகியோர் பயணித்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் குணசேகர் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் செஞ்சி திண்டிவனம் சாலையில் வல்லம் தொண்டு மற்றும் பாலம் அருகே சென்ற போது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.