கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி வீட்டில் இருந்த பணம், உடைகள் பொம்மை ஆகியவற்றை எடுத்து எடுத்துக்கொண்டு இரண்டு சிறுமிகளும் வீட்டை விட்டு வெளியேறினர். தனது பிள்ளைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது காங்கன் கடை பகுதியில் ஒருவர் சிறுமிகளுடன் பேசி அவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான அஜித் குமார் என்பது உறுதியானது. இதனால் அஜித் குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வீட்டிலிருந்து வெளியேறி எங்கு செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகளையும் அஜித்குமார் தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். அதன் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இருவரையும் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்ற வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.

அவர்கள் திருநெல்வேலியில் இறங்கிய போது போலீசார் இரண்டு சிறுமிகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளது. தற்போது காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ஒரு பெண் அளித்த பாலியல் புகாரால் அஜித்குமாரின் திருமணம் நின்றது. அஜித்குமாரின் தந்தை சிவசேனா கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.