
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சவுரப் லண்டனில் இருக்கும் நிலையில் அடிக்கடி இந்தியா வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக சௌரப்புக்கு தெரிய வந்தது.
இதன் காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை மட்டும் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகளின் எதிர்காலத்தை நினைத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அதோடு தன்னுடைய மனைவியையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் லண்டன் சென்ற அவர் கடந்த மாதம் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக இந்தியா வந்தார். அப்போது அவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து அந்த வாலிபருடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்டார்.
அவர்களுக்குள் நடந்த ஆபாசமான வாட்ஸ் அப் உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் முஸ்கான் தன்னுடைய கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 4ஆம் தேதி சவுரப்பை கொன்ற இருவரும், அவரது உடலை துண்டித்து, சிமெண்ட்மூடிய ட்ரம்மில் பதுக்கி வைத்துள்ளனர். மார்ச் 18ஆம் தேதி முஸ்கானின் குடும்பத்தினர் அந்த ட்ரம்மை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இருவரும் மார்ச் 19 அன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்குப் பிறகு முஸ்கான் மற்றும் சாஹல் இருவரும் மணாலிக்கு சுற்றுலா சென்றதோடு அங்கு சாஹலின் பிறந்த நாளைகேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் முத்தம் கொடுத்த வீடியோக்கள் போன்றவைகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்கான் மற்றும் சாஹல் இருவரும் தங்களை ஒரே சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்களாம்.
குறிப்பாக முஸ்கான் சாப்பாடு வேண்டாம் என கூறிவிட்டு தனக்கு கஞ்சா அல்லது ஹெராயின் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். தன்னுடைய காதலனுடன் ஒன்றாக இருக்க விடுங்கள் என்றும் அவர் அடம் பிடிக்கிறாராம். இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களுக்கு அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் கணவனை கொலை செய்த பிறகும் சற்றும் வருத்தப்படாமல் சிறையில் காதலனுடன் இருக்க வேண்டும் என்று முஸ்கான் அடம் பிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.