ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 1,27,772 பேர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 21,582 பெண்கள் உட்பட மொத்தம் 78,023 பேர் தகுதி பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடற் தகுதி தேர்வுகளும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பலர் 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நிலையில் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது கடுமையான வெயிலில் ஓடிய சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் எதிர்பாராத விதமாக 11 பேர் இறந்துவிட்டனர். இது தொடர்பாக மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. மேலும் ஊக்க மருந்து பயன்படுத்துதல் அல்லது கடுமையான வெயிலில் ஓடியதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மரணத்திற்கான உண்மை காரணம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.