திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ப குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்ப குமாருக்கு ஆட்டோவில் தினமும் பயணம் செய்த 16 வயது பள்ளி சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ப குமார் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளிடம் விசாரித்த போது உண்மை தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சொ சட்டத்தின் கீழ் இன்ப குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்ப குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.