
மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மஞ்சு சென்னையில் இருக்கும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளமாறன் என்பவரை மஞ்சு காதலித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் பாணியில் வசித்து வந்தனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இளமாறன் மஞ்சுவை அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு திருமணமானதை மறைத்து இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இளமாறனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மஞ்சு இளமாறனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இளமாறன் மஞ்சுவை தாக்கினார். பின்னர் மஞ்சு தங்களுக்கு திருமணமான தகவலை உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு மஞ்சுவுடன் சேர்ந்து வாழ்வதற்கு இளமாறன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மஞ்சு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இளமாறன் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து வருகிறார். இதனை அறிந்த மஞ்சு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். தன்னை இளமாறனுடன் சேர்த்து வைக்குமாறு மஞ்சு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்