பூந்தமல்லி அருகே உள்ள குமரன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சனிக்கிழமை பயங்கரமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் வேறு ஒருவரை விரட்டிச் செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து, அருகில் போக்குவரத்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் காவலர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஒருவர்  ஓடிவர, பின்னால் வந்த மற்றொருவர் கத்தியால் அவரது கை மணிக்கட்டில் வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயம் ஏற்பட்ட நபரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். மேலும், தாக்குதல்களில் ஈடுபட்ட நபரை போலீசார் கீழே தள்ளி மடக்கி பிடித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், வெட்டப்பட்டவர் நூம்பலை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் எனவும், இவருக்கும் தாக்குதல் நடத்திய நபருக்கும் முன்விரோதம் இருந்தது என்றும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர்களுக்கிடையில் உள்ள பிரச்சனையை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சமரசப்படுத்தி வைத்திருந்த போதிலும், இன்று மீண்டும் நேரில் பார்த்தபோது கோபத்தில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், தாக்குதல் மிகவும் திட்டமிட்டும் தீவிரமாகவும் நடந்ததைக் காண முடிகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் நேரத்தில் செல்லவில்லை என்றால், இந்த சம்பவம் கொலையில் முடிந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.