ராஜஸ்தானின் கோட்டா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மனிஷ் என்ற நபர், மருத்துவர்களின் தவறான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மனிஷ், சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்கு செல்லும் நாளில், தனக்காக யாரும் இல்லாததால், தனது உடல் நலம் சரியில்லாத அதாவது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையை ஆதரவுக்காக அழைத்து வந்தார்.

சிகிச்சைக்கு முன் தனது தந்தையை ஓ.டி. அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்ன மனிஷ், அறுவை சிகிச்சையிலிருந்து வந்தபோது அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சொல்ல முடியாதது. “என்னுடைய தந்தைக்கு 5-6 தையல்கள் போட்டிருக்காங்க. என்ன நடந்துச்சுன்னே தெரியலை,” என வேதனையுடன் கூறியுள்ளார். உரையாடும் திறனின்றி இருந்த அவரது தந்தையை, மருத்துவர்கள் தவறாக சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மனிஷ் மேலும் கூறியதாவது, “என்னை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் பெயரும் எனக்கு ஞாபகம் இல்லை. நானும் இந்த நிலைமையில் இருக்கேன். என்ன செய்யறதுனே தெரியல” என்கிறார்.

அதாவது ஜெகதீஷ் என்று டாக்டர்கள் அழைத்தபோது மனிஷின் தந்தை கை தூக்கி உள்ளார். அவர்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்  அவரால் விளக்கி சொல்ல முடியவில்லை. உடனடியாக மருத்துவர்கள் அவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று இடது கையில் டயாலிசிஸ் பிஸ்துலா அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளே நுழைந்த பிறகு தான் தவறுதலான நபருக்கு ஆப்ரேஷன் நடைபெறுகிறது என்பது தெரியவந்தது.

உடனடியாக ஆப்ரேஷன் நிறுத்தப்பட்டு அவரின் கையில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் இருந்த ஒரு 60 வயது முதியவருக்கு தவறுதலாக அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.