
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 15 ஆம் தேதி பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்டமாக கடந்த வருடம் நவம்பர் முதல் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக போலி செய்திகள் வெளி வருகிறது.
அதாவது மகளிர் உரிமை தொகைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் இங்கு சென்று விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக பணம் வழங்கப்படும் என்றும் தகவல் பரவி வருகிறது. இதை நம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் கூட்டமாக குவிகிறார்கள். இதனால் தற்போது அமைச்சர் கீதா ஜீவன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமை தொகைக்கு பெண்கள் யாரும் தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.