
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது வாலிபர் மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.
இதனை அவர் தன்னுடைய நண்பர்களிடம் காண்பித்துள்ளார். அப்போது அவருடைய நண்பர் தமிழரசன் தன்னுடைய செல்போனிலும் அந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன்பின் தமிழரசன் அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு ரூ. 15,000 கொடுக்க வேண்டும் எனக் கேட்டதோடு பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன் மாணவியுடன் தொடர்ந்து பழகியுள்ளார். அதோடு மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோ மற்றும் படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை புவனேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதனால் அவர் தமிழரசனை சந்தித்து புவனேஸ்வரனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் தமிழரசன் வாலிபரை மது குடிக்க அழைத்து சென்ற நிலையில் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர் காரில் தமிழரசன் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் காரில் இருந்து இறங்கியதும் கூலிப்படையினர் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ய துரத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக புவனேஸ்வரன் ஓடிய நிலையில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தமிழரசன், சிறுமியின் தந்தை உட்பட 7 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.