
சென்னை மாவட்டம் ஓஎம்ஆர், பிடிசி சந்திப்பு பல்லவன் குடியிருப்பில் டெல்லி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். கடந்த 9-ஆம் தேதி டெல்லி பாபு உட்பட 2 பேர் வீடுகளில் மர்ம நபர்கள் 30 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் எழில் நகரை சேர்ந்த ரம்யா, கஸ்தூரி, மீனா, கலைவாணி, சுமதி ஆகியோரை அதிரடியாக கைது செய்து 24 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சுமதி திட்டம் போட்டு பெண்களுடன் இணைந்து திருடியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டை பூட்டி விட்டு சாவியை பூந்தொட்டிகளில் மறைத்து வைக்கப்படுவதை கண்காணித்து வந்துள்ளனர்.
பின்னர் அந்த வீடுகளை குறி வைத்து திருடுவதை வழக்கமாக வைத்திருப்பது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைந்து திருடிவிட்டு அதே இடத்தில் சாவியை வைத்து வந்துள்ளனர்.
வறுமை காரணமாக திருட்டில் ஈடுபட்டதாக பெண்கள் கூறியுள்ளனர். போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.