அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11 லட்ச ரூபாய் பணத்தை சிவா ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். இதனைடுத்து ரயில்வே டிக்கெட் பரிசோதனை அலுவலர் பணி வழங்கப்பட்டதாக சிவாவுக்கு ஒரு ஆணை வந்துள்ளது.

மேலும் கொல்கத்தாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் சரிபார்ப்பு மற்றும் குப்பை தொட்டி பராமரிப்பு பணியை முதலில் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு சிவாவுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அங்கு சுமார் 45 நாட்கள் வேலை பார்த்த பிறகு சிவாவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை சிவா அரியலூர் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரத்தைச் சேர்ந்த தாமோதரன் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா ஆகியோர் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த சொகுசு கார், ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தாமோதரன் மற்றும் சிவாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டெல்லியைச் சேர்ந்த மணிஷ் பாண்டே என்பவரது கணக்கில் இருந்த 26 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் முடக்கியுள்ளனர்.