தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின்  கீழடுக்கு பகுதிகளில் ஒரு கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 24-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.