
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பருவமழையை சந்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் 169 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதோடு பருவமழையை கண்காணிக்க 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மழை நீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்புகள் இருக்கிறது. அதன் பிறகு மரக்கிளைகளை அகற்ற 250க்கும் மேற்பட்ட எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் TN ALERT என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த செயலி பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வானிலை மைய தகவல்கள் மற்றும் பணிகளில் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை காட்டும்.
இதனை பொதுமக்கள் அனைவரும் தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் பருவமழை குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அதோடு பருவமழையால் பொதுமக்கள் தங்களுக்கு நேரும் பிரச்சனைகள் குறித்தும் இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். மேலும் தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் இந்த செயலியை தங்கள் வசதிக்கு ஏற்ப டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.