சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சூரக்குடி எனும் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பங்கேற்க செய்தனர். இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த மாடுபிடி வீரரான கார்த்திக் என்பவரும் அந்த போட்டியில் கலந்துகொண்டார்.

அவர் மாடுகளை அடக்கும்போது மாடு ஒன்று அவரை முட்டி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேய மயங்கி விழுந்தார். அதன்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மஞ்சுவிரட்டு போட்டி சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.