கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதனால் வீடுகளை இழந்து மக்கள் தவிக்கும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சவுக்கு நிவாரண பணிகளுக்காக பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண பணிகளுக்கு நிதி அனுப்பி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி 200 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா கேரளாவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்துள்ளார். அதோடு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கேரள முதல்வருக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.