ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு சென்ற காஷ்மீர் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சஜாத் அகமத் பாத் எனும் ஷால் விற்பனையாளர்தான் அந்த மனிதநேயம் நிறைந்த செயலை செய்தவர். “மதத்தைவிட மனிதநேயம் முக்கியம்” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்த அவர், சுற்றுலாப் பயணிகள் அழும் காட்சிகளைப் பார்த்ததும், அவர்களுக்காக ஆறுதல் அளிக்கச் சென்றதாக கூறினார்.

வாட்ஸ்அப்பில் வந்த தகவலைக் கேட்டு, உடனடியாக பலர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பஹல்காம் போனி சங்கத் தலைவர் அப்துல் வஹீத் வான், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு முதலில் தகவலை வெளியிட்டவர். “சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை. அவர்கள் வந்தால்தான் எங்கள் வீடுகளில் விளக்குகள் எரிகின்றன.

ஆனால் இந்த தாக்குதலால் நாங்களும் மனஅழுத்தத்தில் இருக்கிறோம். எங்களுடன் பயணிக்கிறவர்கள் நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். குற்றவாளிகள் கண்டிப்பாக கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.