
மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த மணிமேகலை (24) என்ற பெண் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் ஏடிஎம் கார்டில் பணம் வரவில்லை என கூறி பூங்கொடியிடம் வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் வங்கி கணக்கிலிருந்து ரூ.54,000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பண மோசடி தொடர்பாக 17 வழக்குகள் இருக்கிறது. அதாவது மணிமேகலை ஏடிஎம் மையத்திற்கு வரும் வயதானவர்கள் உட்பட பலரை ஏமாற்றி பணத்தை திருடியுள்ளார். இவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று மாலை மணிமேகலையை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பின்னர் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் உடைமாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் திருமங்கலம் அருகே மணிமேகலையை பிடித்தனர். அவர் தப்பி ஓடிய 2 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.