காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தகை சால் தமிழர் குமரி ஆனந்தன் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் தமிழ் மொழிக்காக ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒழிக்க முக்கிய பங்கு வகித்தவர் குமரி ஆனந்தன். இவருடைய சகோதரர் மறைந்த காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ வசந்தகுமார். இவருடைய மகள் தமிழிசை சௌந்தர்ராஜன். இந்நிலையில் குமரி ஆனந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் குமரி ஆனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.