மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் நிதி தருவோம் என்று கூறிவிட்டது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் தமிழ்நாட்டில் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு கூறிவரும் நிலையில் எந்த அரசியலமைப்பு சட்டத்தில் கண்டிப்பாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று இருக்கிறது என்று கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நறுமுகை என்ற நான்கு வயது எல்கேஜி படிக்கும் சிறுமி மத்திய அரசு 2000 கோடி கல்விக்காக நிதி தரவில்லை என்றால் என்ன நானே என்னுடைய சேமிப்பிலிருந்து 10,000 ரூபாய் தருகிறேன் என்று முதல்வரின் சிறப்பு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அந்த சிறுமி இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.