தேனி நகரில் இயங்கிவரும் “ஜெ.ஜெ. ப்ரோடிஜீஸ்” என்ற பெயரில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் இடம்பெற்ற செயல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் இருப்பவர்கள், அதனை மீறி ஒரு குழந்தையை  குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காப்பகம் ஜெனிபர் என்ற பெண் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, 1.5 வயதுள்ள குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு ஊழியர்கள் உருட்டியதும், ஊஞ்சல் போல் ஆட்டியதும், குழந்தையை அந்த தொட்டியில் இருந்து கீழே போட முயன்றதும் வீடியோவில் தெளிவாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. குழந்தை துன்புறுத்தப்பட்டதாகவும், இது குழந்தையின் உடல் மற்றும் மன நலனுக்கு எதிரான செயலாக இருப்பதாகவும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதும், குறித்த ஊழியர்கள் குழந்தையை ஒழுக்கம் கற்பிப்பதற்காக இப்படிச் செய்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குழந்தையின் உரிமையை மீறியதாகவும், அந்தக் காப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.