ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருந்த நபரை கடத்திச் சென்று உயிரோடு  புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் ஹர்தீப் என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் வாடகைக்காக ஜக்தீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபா மஸ்நாத் பல்கலைக்கழகத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜக்தீப் தன்னுடைய மனைவியுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த ஹர்தீப் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி சற்கி தாத்ரி பகுதியில் உள்ள பண்டாவாஸ் கிராமத்தில் போர்வெல் தோண்ட வேண்டும் என்று காரணம் கூறி 7 அடி ஆழமான குழியை தோண்டுமாறு கூறியுள்ளார். பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் தேதி  ஜக்தீப் கல்லூரியில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் ஹர்திக் மற்றும் அவரது நண்பர்கள் அவரை கடத்தினர்.

அதன் பின் அவரது கை, கால்களை கட்டி வாயில் டேப் ஒட்டி  அந்த குழிக்குள் தூக்கி வீசி மண்ணால் மூடி உயிருடன் புதைத்தனர். இதைத் தொடர்ந்து ஜக்தீப் காணாமல் போனதாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக சமீபத்தில் அவரது மொபைல் பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஹர்திக் மற்றும் அவரது நண்பர் தரம் பால் ஜக்தீப்பை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரித்த போது கொலையின் முழு விவரமும் வெளிவந்தது. தற்போது மற்ற குற்றவாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் பலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.