உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பூர் மாவட்டத்தின் தாதியால் நகரத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்ற இளைஞர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, மும்பையில் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன், அவர் இரு வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இதில், தனது மரணத்திற்கு மனைவி, அவரது காதலன் மற்றும் குடும்பத்தினர் தான் பொறுப்பு எனவும், போலி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஆரிஃப் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முதல் வீடியோவில் தற்கொலைக்கு தயாராகும் நேரத்தில் அவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மனைவி இப்போது தன்னுடன் இல்லை என்றும், இரு இளைஞர்களுடன் வாழ்கிறார். அவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் ஆரிஃப் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மும்பை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரிஃபின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவரது சகோதரர் ஷெரீப் உடனடியாக ராம்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு, உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்.

குடும்பத்தினரின் புகாரின் பேரில், மனைவி மற்றும் மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.