
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைமுருகன்(40). இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் உறுதி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ஆம் தேதி கழுத்தில் காயத்துடன் துரைமுருகன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துரை முருகனின் மனைவி ராமலட்சுமி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் துரைமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது துரைமுருகனின் உறவினரான ஜெய்கணேஷ்(35) என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமலட்சுமியுடன் பேசி வந்தார். இதனை அறிந்த துரைமுருகன் ஜெய்கணேஷை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் கடந்த ஐந்தாம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு ஜெய்கணேஷ் துரைமுருகனின் வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் ஜெய்கணேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.